1. Home
  2. தமிழ்நாடு

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

1

2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் மீது 2011ம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 2016ல் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கிலிருந்து விடுவித்தது.

ஆனால் அப்போது சட்ட அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம், இதை உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து வழக்கிற்கு மீண்டும் உயிரூட்டினார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் 21ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார். இருப்பினும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். மூன்றாண்டு சிறை தண்டனைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொன்முடி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலே எம்எல்ஏ பதவி ராஜினாமா என்ற அடிப்படையில், எம்எல்ஏ பதவியை அவர் இழப்பாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது. அல்லது உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் அவர் மீண்டும் எம்.எல்.ஏ., பதவியில் தொடர்பாரா என்பது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like