1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜன. 10 முதல் விநியோகம் : தமிழ்நாடு அரசு

1

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் விநியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், 13-ம் தேதிக்குள் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள், 14-ம் தேதியும் பரிசத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜன.1-ம் தேதி, பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.35.20 விலையில் ஒரு கிலோ அரிசியும், ரூ.40.61 செலவில் ஒரு கிலோ சர்க்கரையும், ரூ.33 செலவில் ஒரு கரும்பும் கொள்முதல் செய்ய, ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த அரசாணையில் ரொக்கத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, தீவிர ஆலோசனைக்குப் பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த ஜன.2-ம் தேதி தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ரூ. 1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 13-ம் தேதிக்குள் பரிசு தொகுப்பை பெற முடியாதவர்கள், 14-ம் தேதியும் பரிசத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like