மாற்றுத்திறனாளி அணிந்த பொங்கல் இலவச சேலை; முதல்வர் பாராட்டு

35 வயதான மாளவிகா கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கிருஷ்ணன் ராஜஸ்தானில் பொறியாளராக பணியாற்றியவர். அம்மாநிலத்தில் உள்ள பீகானிர் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் கிருஷ்ணன்.
இந்நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு 13 வயதான மாளவிகா தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் கிடந்த மர்மப்பொருள் திடீரென வெடித்துச் சிதறியதில் சிறுமி மாளவிகா படுகாயம் அடைந்தார். அவர் தனது இரு கைகளையும் இழக்க நேரிட்டது.
எனினும், பெற்றோர் அளித்த ஊக்கத்தால் தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று, தற்போது முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் மாளவிகா, அண்மையில் தமிழக அரசு விநியோகித்த விலையில்லாச் சேலையை அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
மேலும் தமது பதிவில் தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில், விலை மதிப்பில்லா புன்னகையுடன் மாளவிகா, “பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதிலும் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்,” எனக் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவு முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பெரிதும் கவர்ந்தது.
இதையடுத்து, மாளவிகாவின் பதிவை மேற்கோள்காட்டி, “பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்,” என்று பாராட்டியுள்ளார் முதல்வர். மாளவிகா வெளியிட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.