1. Home
  2. தமிழ்நாடு

போலீஸ் கண்காணிப்பு தீவிரம் - தேர்தல் நேரத்தில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்..?

Q

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு கட்சியின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நட்சத்திர பேச்சாளர்களும் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், இவ்வாறு பிரசாரம் செய்யும் இடங்களில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மாநில உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், கோயில், மசூதி, சர்ச் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உளவுப்பிரிவு போலீசாரும், லோக்கல் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் துணை கமிஷனர்கள் மதிவாணன், பிருந்தா, ராஜேந்திரன் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில் முக்கியமான இடங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தனிப்படையிலும் 18 பேர் இடம் பெற்றுள்ளனர். அந்தந்த உதவி கமிஷனர்கள் தலைமையில் இத்தனிப்படை இயங்கும். இவர்கள் தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். வாகன தணிக்கையுடன், லாட்ஜ் சோதனையையும் செய்வார்கள். தினமும் ஒரு துணை கமிஷனர் இரவு ரோந்தில் ஈடுபடுவார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, தேர்தலில் குளிர்காய சிலர் திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்று முதல் தொடர் சோதனை நடக்கும். வழக்கம்போல உள்ளூர் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். தடை செய்யப்பட்ட அமைப்புகளும் கண்காணிக்கப்படும்’’ என்றனர்.

Trending News

Latest News

You May Like