உடுமலை அருகே எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் சிறப்பு எஸ்ஐ வெட்டிக்கொலை..!1 கோடி முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..!
உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சிக்குட்பட்ட சிக்கனுத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் கடந்த சில வருடங்களாக பணியாளர்களாக திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டி தங்களது குடும்பத்துடன் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தோட்டத்தில் தந்தை- மகன் சண்டையிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அருகில் வசிக்கும் தோட்டத்து உரிமையாளர்கள் அவசர உதவி 100க்கு போன் செய்த தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். பிரச்னை முடிந்து கிளம்பும் பொழுது குடிபோதையில் இருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் ஆத்திரத்தில் ,காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சண்முகவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் சம்பவ இடத்தில் கோவை மேற்கு மண்டல டிஐஜி சசிமோகன் , மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்பி யாதவ்கிரிஸ் அசோக் நேரில் ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட காவல் சிறப்புஉதவி ஆய்வாளர் சண்முகவேல் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடுமலை அருகே காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையில் காவல் உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.
உயிரிழந்த போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். ''