பாலியல் வன்கொடுமையில் தேடப்பட்ட இளைஞரை காலில் சுட்டு பிடித்த போலீஸ்! மற்றொருவருக்கு மாவுக்கட்டு..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வரும் இளம்பெண், தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கோவில்பட்டியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மது போதையுடன் நள்ளிரவில் வீடு புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆய்வாளர் பிரேமா தலைமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார் விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், மோப்பநாய் கொண்டுவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் குற்றவாளி மாரியப்பனை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது தப்பியோட முயன்ற அவர் தடுமாறி கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்து மாவுக்கட்டு போட்டனர்.
வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான மாரி செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவரைப் பிடிக்கச் சென்றபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து, அவரது இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் போலீசார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாரிச்செல்வம் மற்றும், காயமடைந்த 2 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.