எஸ்.ஐ-யை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்..!
தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாவட்டம் தோறும் ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் (38) என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.
செல்வம் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ளன. இவர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிகழ்ந்த குற்றவியல் சம்பவங்களில் அதிகமாக ஈடுபட்டதால், இவரை தூத்துக்குடி செல்வம் என்றே போலீஸ் வட்டாரத்தில் அழைத்து வந்தனர்.
அவ்வப்போது குமரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். செல்வத்தை போலீஸார் தேடி வந்த நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி பகுதியில் சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் அவரை கைது செய்யும் முயற்சியில ஈடுபட்டனர். கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, எஸ்ஐ லிபி பால்ராஜ் மற்றும் போலீஸார் அஞ்சுகிராமம் பகுதியில் நின்ற அவரை பிடிக்க முயன்றபோது தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை சுசீந்திரம் அருகே தேரூரில் செல்வம் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்தனர். போலீஸாரை பார்த்ததும் தப்பி ஓடமுயன்ற செல்வம் கத்தியால் போலீஸாரை நோக்கி தாக்கியுள்ளார். இதில் எஸ்ஐ, லிபி பால்ராஜின் இடது கையில் கீறல் விழுந்ததது. இதைபார்த்து மற்ற போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடமுயன்ற செல்வத்தை நோக்கி இன்ஸ்பெக்டர் ஆதம்அலி துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி செல்வத்தின் வலது காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் நின்ற ரவுடி செல்வத்தை போலீஸார் பிடித்தனர். பின்னர் காயமடைந்த எஸ்ஐ லிபி பால்ராஜ், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரவுடி செல்வம் ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையோட்டி அவர்கள் சிகிச்சை பெறும் அவசர பிரிவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் கொலை, மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி செல்வம் போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.