பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு..!
தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாமக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்தினார். இதில் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வக்கீல் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் போராட்டத்தின் போது, மாவட்ட செயலாளர் பிரதீப், இலவச தொலைக்காட்சி, மின்விசிறி ஆகியவற்றை தூக்கிப்போட்டு உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.