சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் கடந்த மே 04ம் தேதி காலை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை கோவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனிடையே அவர்கள் வந்த இன்னோவா காரில், தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலில், தேனி வட்டாட்சியர் ராணி முன்னிலையில் சோதனை செய்ததில், 409 கிராம் கஞ்சா மற்றும் 15,500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் அவர்கள் தங்கியிருந்த அறையில், நடத்திய சோதனையில், பணம் 54,130 ரூபாய் மற்றும் வங்கி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதால், இது தொடர்பாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய மூவர் மீது IPC 294 (b), 353 மற்றும் TN Women Harrasment prohibition Act 4, NDPS Act 8(C), 20(b)(II)(A), 29(1), 25 என அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்து. . சவுக்கு சங்கரின் உதவியாளர்கள் ராம் பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவரிடம் தேனி மாவட்ட கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி பெரியகுளம் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் தேனி காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை தேனி போலீசார் கைது செய்த நிலையில் அவரது வீட்டில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது . சவுக்கு சங்கர் வீட்டில் காலை முதல் ஆய்வாளர், காவலர்கள் என 5 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.