கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போலீசார் - லயோலா கல்லூரி மாணவர்கள் !

சென்னை அண்ணா நகரில் காவலர்கள் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, கே4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் துளசிமணி தலைமையில், போலீசார் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, உலக சுகாதார மையம் கூறியது போல் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், அதன் மூலம் 90 சதவீதம் நோய் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். மேலும், அடிக்கடி நமது கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், வாகனஒட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும், கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும், சிக்னல்களில் நின்று செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை இயக்கூடாது மற்றும் 3 பேர் அமர்ந்து வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்டவைகளை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்தனர். அப்போது, பொது மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், கொரோனா வைரஸ் நோயை பொறுத்தவரை நகரம் முதல் கிராமம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம்.
இந்த வைரஸ் கிராமம் வரை கூட பரவி இருந்தாலும், தற்போது அனைத்து இடங்களிலும் குறைந்துள்ளது. இதற்கு பொது மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதே காரணம். இருப்பினும் நாங்கள் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து சென்னையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம். எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படக் கூடாது. ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்களின் இந்த விழிப்புணர்வு பிரச்சாம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.
newstm.in