தவெக முதல் மாநாட்டை நடத்த 17 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி..!
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் அக்டோபர் 27-ம் தேதி, தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துகிறார். இதனையொட்டி, மாநாடு நடத்த அனுமதி கோரி, கடந்த 21-ம் தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் ஏடிஎஸ்பி-யான திருமாலிடம் மனு அளித்தார்.
இதனிடையே, மாநாடு நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே காவல்துறை கேட்டிருந்த 31 கேள்விகள் தொடர்பான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்து முடித்துள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்தில் அனுமதி கிடைத்தவுடன் மாநாட்டுப் பணியைத் தொடங்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது. முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்தித் தரவேண்டும்,
விஐபி-க்கள் வரும் வழிகளில் எந்தவித பிரச்சினைகளும் நிகழாமல் போதிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி மாநாட்டுக்கு ஏடிஎஸ்பி-யான திருமால் அனுமதி வழங்கி உள்ளார்.