பிரபல தமிழ் நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு..!
மலையாள திரையுலகை அடிப்படையாய் கொண்டு நடிக்க ஆரம்பித்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமாகிய பின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அந்த படம் அருண் விஜய்க்கு எப்படி திருப்பு முனையாக அமைந்ததோ அதை போல, இவருக்கு அந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அந்த படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து பெயர் எடுத்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், அவர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற தலைப்பின் கீழ் எடிசன் விருதுகள் வழங்கப்பட்டது. இவர் சமீபத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான வெள்ள ராஜா எனும் இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த தொடரில், பாபி சிம்ஹா, காயத்ரி சங்கர் யுதன் பாலாஜி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் .
இந்நிலையில் தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்ற முன்னாள் ஊழியரரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் உள்ளிட்டோர் மீது தேனாம்பேட்டை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் ஊழியர் சுபாஷ் அளித்த புகாரில் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், பார்வதி நாயர் வீட்டில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ஐபோன், மடிக்கணினி போன்றவை காணாமல் போனதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்காக தனது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தேகித்தார்.
சுபாஷ் சந்திரபோஸ், இதற்குப் பதிலாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் உள்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார். அதில், தன்னை அடைத்து வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டினார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி ஜெயச்சந்திரன், சுபாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த உத்தரவு வழங்கப்பட்டதுடன், சுபாஷ் தரப்பில் மீண்டும் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால், தேனாம்பேட்டை காவல்துறை, பார்வதி நாயர், கொடப்பாடி ராஜேஷ் மற்றும் மற்ற 6 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.