1. Home
  2. தமிழ்நாடு

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு..!

1

நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்த தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி நேற்று (04.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்திருந்தார் இது தொடர்பாக  அவர் இன்று (05.11.2024) வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சூழல் சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். தெலுங்கு மக்களைப் புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை.

கவனக்குறைவான எனது பேச்சின் மூலம் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டால் அதற்கு வருந்துகிறேன். எனவே அனைவரின் நலன் கருதி, நவம்பர் 3 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கு மக்கள் தொடர்பான அனைத்து பேச்சுகளையும் திரும்பப் பெறுகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே அகில இந்தியத் தெலுங்கு சம்மேளன இயக்கத்தின் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

அதில், “நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசுவது, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like