விரட்டி விரட்டி பிடித்த போலீசார்.. ஒரே நாளில் 929 வாகனங்கள் பறிமுதல்.. காரணம் இதுதான் !!
விரட்டி விரட்டி பிடித்த போலீசார்.. ஒரே நாளில் 929 வாகனங்கள் பறிமுதல்.. காரணம் இதுதான் !!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமையன்று முழு நேர ஊரடங்கு கண்காணிப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தியது. சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று (16.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, நேற்று காலை 6 மணி முதல் இன்று (17.01.2022) அதிகாலை 5 மணி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முழு ஊரடங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 877 இருசக்கர வாகனங்கள், 27 ஆட்டோக்கள் மற்றும் 25 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று (16.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 3,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7,89,400 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20,000 அபராதமும் வசூலிக்கப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.
newstm.in