விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் எல்லை மீறினால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் - சென்னை உயர்நீதிமன்றம்..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் தகவலை வெளிப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்ற நிலையில், மாணவியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக எஃப்.ஐ.ஆர் நகல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எஃப்.ஐ.ஆர் நகலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை, காவல்துறையினர் துன்புறுத்துவதாக சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, "இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, இந்த அழைப்பாணையை பத்திரிக்கையாளர்களின் செல்போனுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் அனுப்பி வருகிறது. இருந்தபோதும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிக்கையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர்.
அவ்வாறு விசாரணைக்கு செல்லும் பத்திரிகையாளர்களை சிறப்பு புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப் போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்கு சற்றும் பொருந்தாத கேள்விகளை கேட்பதாகவும் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கும் மேலாக, விசாரணைக்கு சென்ற சில பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் சில மின்னணு கருவிகளை பறிமுதல் செய்வது அவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளை முடக்குவதுடன், அவர்களை அச்சுறுத்துவதாகவும் அமைந்துள்ளது" என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சூழலில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொது தளத்திற்கு வந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். காவல்துறை எல்லை மீறினால், உச்சநீதிமன்றத்தை அணுகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.