1. Home
  2. தமிழ்நாடு

போலீஸ் அடித்து மரணமா? இளைஞர் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு!

போலீஸ் அடித்து மரணமா? இளைஞர் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு!


மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இறந்த இளைஞரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது தம்பி ரமேஷை, சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் ரமேஷ் வீடு திரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

மறுநாள் அதிகாலை வீட்டின் அருகே ஒரு மரத்தில் ரமேஷின் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது என்றும் போலீஸார் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதால் ரமேஷ் உயிரிழந்துள்ளார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மாலை 4 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என விதியுள்ள போது ரமேஷின் உடல் மாலை 5.30க்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்த சந்தோஷ் ரமேஷின் உடலை மதுரை, தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூத்த தடயவியல் துறை பேராசிரியர்களை கொண்ட குழுவை நியமித்து மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது தடயவியல் துறையை சேர்ந்த மருத்துவர்கள் இல்லாமல் சாதாரண மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள என்ன அவசியம் வந்தது?, தேனி அல்லது மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடலை கொண்டுச் செல்லாமல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

எனவே தடயவியல் துறையை சேர்ந்த மூத்த மருத்துவர் மதிகரன் முன்னிலையில் நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் செல்வமுருகன், பிரசன்னா ஆகியோர் மனுதாரர் சகோதர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக். 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like