கோவையில் இருந்து அயோத்திக்கு திட்டமிடப்பட்ட இருசக்கர வாகன யாத்திரைக்கு போலீஸார் திடீர் தடை ..!
அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் இந்துஷா காஞ்சி என்பவர் இருசக்கர வாகன யாத்திரை செல்ல திட்டமிட்டார்.
கோவை ராம் நகர் ராமர் கோயிலில் இருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் யாத்திரை சென்று அயோத்தி ராமர் கோயில் விழாவுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி, நேற்று காலை ராம் நகரில் உள்ள ராமர் கோயிலுக்கு வந்தார்.
கோயிலில் பூஜை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் யாத்திரை புறப்பட தயாரானார். அவரை வழியனுப்ப கோவை பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ண பிரசாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வந்திருந்தனர். காவல் உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீஸார் ‘இரு சக்கர வாகன யாத்திரைக்கு முன்கூட்டியே அனுமதி வாங்கி இருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி அனுமதி இல்லை’ என பாஜக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதனால் அயோத்தி வரை செல்ல திட்டமிட்டு இருந்த இருசக்கர வாகன யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து இந்துஷா காஞ்சி கூறும்போது,‘‘நான் சிறு வயதில் இருந்தே ராமர் பக்தை. இந்த இருசக்கர வாகன யாத்திரைக்காக ஒரு மாத காலமாக திட்டமிட்டு வந்திருந்தேன். ஆனால் தனி நபராக யாத்திரை செல்ல போலீஸார் அனுமதி மறுப்பது ஏன் என தெரியவில்லை” என்றார்.