பிரதமரின் இந்தோனேஷியா சுற்றுப்பயண அறிவிப்பிலும் 'இந்திய பிரதமர்' என்பதற்கு பதிலாக 'பாரத பிரதமர்'..!

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.இந்த உச்சி மாநாடு தொடங்கும் 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரவு விருந்து அளிக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்படும் அழைப்பிதழ்களில் The President Of India என்ற பெயர் தான் இடம்பெற்றிருக்கும்.ஆனால் ஜி20 அழைப்பிதழில் The President Of Bharat என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 18-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்குச் செல்கிறார். அங்கு இந்தோனேசியா நடத்தும் 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்.பிரதமரின் பயண அறிவிப்பிலும் ‘பாரத பிரதமர்’ என்று இடம் பெற்றுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து அனுப்பப்படும் அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நிரலிலும் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.