எங்கள் வெற்றி கூட்டணியில் பாமக நிச்சயம் இணையும் : எடப்பாடி பழனிசாமி..!
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அதிமுக ஆட்சியில் இருந்ததை விட பல மடங்கு உயர்ந்துவிட்டது. வீடு கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருட்களான செங்கல், ஜல்லி, சிமெண்ட், கம்பி அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது. இனி நிஜத்தில் வீடு கட்ட முடியாத சூழல்தான் உள்ளது. கனவில் வேண்டுமானால் வீடு கட்டலாம்.
திமுக ஆட்சியில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 7,737 கொலைகள் நடந்திருக்கிறது. கசாப்பு கடையில் ஆடு வெட்டப்படுவது போல மனிதர்கள் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு அரசு நமக்குத் தேவையா?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியை பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருப்பதால் நான் விமர்சித்துப் பேசுகிறேன் என்று குறிப்பிட்ட அவர், “அதற்கு ஏன் திமுகவுக்கு கோபம் வருகிறது? எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து வந்தார் என்கிறார்கள். சரி நான் எப்படியோ வந்துவிட்டேன். நீங்கள் ஏன் என்னை கண்டு அஞ்சுகிறீர்கள்? சட்டமன்றத்தில் திடீரென்று எழுந்து பாஜகவோடு எப்படி கூட்டணி வைக்கலாம் என்று கேட்கிறார் ஸ்டாலின். இது அதிமுகவின் கட்சி விவகாரம், அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்து ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. மதவாதக் கட்சியோடு கூட்டணி என்கிறார். திமுகவும் 1999,2001ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணி வைக்காத கட்சியே கிடையாது” என்று விமர்சித்தார்.
அதே சமயம் காங்கிரஸ், விசிக, பாமக என எல்லோருடனும் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, “இப்போது பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. நிச்சயம் நம்மோடு அவர்களும் வருவாங்க” என்றும் தெரிவித்தார். திமுக நான்கு ஆண்டுகளாக மக்களை கண்டுகொள்ளவில்லை என்றும், உதயநிதியை எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் ஆக்கியது ஒன்றுதான் சாதனை என்றும் விமர்சனம் செய்தார்.
மேலும், “ஒரு சாதாரண விவசாயி. உங்கள் முன் நிக்கிறேன். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். குடும்பப் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் அதுதான் இப்பயணத்தின் நோக்கம். வீறு கொண்டு எழுவோம் வீழ்ந்த தமிழகத்தை மீட்போம். அதிமுக, பாஜக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளுக்கு அவர்களின் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கூறி உரையை முடித்தார்.