1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி..!

1

சிவகாசியில் மதி ஒருங்கிணைந்த புதிய மருத்துவமனை வளாக திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனை தலைவர் டாக்டர் மகேந்திரசேகர் தலைமை வகித்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பின் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு கடந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டியும், நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரையில் வைகை ஆறு இருந்தாலும், காவிரி குடிநீர் தான் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. கால நிலை மாற்றம் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீர் மேலாண்மை திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

பட்டாசு தொழிலை அனைவரும் பாதுகாப்பாக நடத்த வேண்டும். பட்டாசு மற்றும் தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். சீனாவில் இருந்து பட்டாசு மற்றும் லைட்டர்கள் இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும். முதல்வர் 17 நாட்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, ரூ.7,600 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே மேற்கொண்டு உள்ளார். அதை முதலீடு என்ற கூற முடியாது.

அண்டை மாநில முதல்வர்கள் 5 நாட்களில் ரூ.30 ஆயிரம் கோடி, ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள நிலையில், ஸ்டாலினில் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்ததாகவே பாமக கருதிகிறது. திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்துள்ளோம் என தமிழக அரசு கூறுகிறது. ஆனால் ரூ.87 ஆயிரம் கோடி அளவுக்கு தான் பணிகள் தொடங்கி உள்ளது. எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், வேலை வாய்ப்பு இல்லாததால் சாதி பிரச்சினைகள் வருகிறது. தென்மாவட்டங்கள் கல்வியில் முதன்மையாக இருந்தும் வேலைவாய்ப்பு இல்லை. வேலைவாய்ப்பு கொண்டு வந்தால் தென்மாவட்டங்களில் பிரச்சினை வராது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் கொள்ளை அடித்து கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பாலியல் குற்றங்கள், கொலைகள் அதிகரித்ததற்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் தான் முக்கிய காரணம். பள்ளிகள் அருகே போதை பொருள் விற்பனை தாராளமாக நடக்கிறது. இதுகுறித்து பலமுறை நேரில் முறையிட்டும் முதல்வர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். தமிழகம் சர்வதேச போதை பொருள் கடத்தும் மையமாக இருப்பதாக தேசிய போதை பொருள் தடுப்பு முகமை அறிக்கை கூறுகிறது.

தமிழகத்தில் அதிக மது ஒழிப்பு போராட்டம் நடத்தியது பாமக. மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்ற பாமகவை சேர்ந்த மாநில பொருளாளர் உட்பட 15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்றுள்ளனர். பாமக சாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சி. பாமவை விமர்சிப்பதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. சென்னையில் 500 பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளனர். 22 மாதங்களில் 32 விழுக்காடு மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like