1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை..!

1

மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கையோடு நீட் தேர்வு விலக்கு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரிப்பது எளிதான ஒன்றல்ல.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மட்டும் தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி அவர்கள், நேருவுக்கு அடுத்தபடியாக அந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது பிரதமர் ஆவார். இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நரேந்திர மோடி அவர்கள், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில் துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

அதன் பயனாக உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த இலக்கையும் மோடி அவர்கள் நிச்சயம் வென்றெடுப்பார்.

மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து இந்த நாடு, குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில் மாநில ஒதுக்கீடு வழங்குதல், நீட் விலக்கு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை அதிகரித்தல் போன்றவை சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. அதை கண்டிப்பாக மத்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like