தமிழ்நாட்டுக்கு பிரதமர் வருகை! ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் !
பிரதமர் மோடி டிசம்பர் மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மக்கள் பயன்பாட்டுக்காக அவர் அர்ப்பணிக்க உள்ளார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுளத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டணிகள் குறித்தும் தமிழக பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அதனால் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ” என் மண் என் மக்கள்” நடைபயணம் வரும் ஜனவரி மாதம் நிறைவடைய உள்ளது. இந்த நிறைவு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவது உறுதியாகியுள்ளது.