பிரதமர் மோடியின் சிறுதானிய பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை..!

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அது போல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது வழங்கப்படுகிறது. சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு, பிரதமர் மோடியின் உரையை உள்ளடக்கிய அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ் என்ற பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 66-வது கிராமி விருதுக்கு அந்த பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, அந்த விருதை வழங்கும் அமைப்பு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஆரோக்கிய நலன்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு எடுத்துள்ள முயற்சிகள் இந்த பாடலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலகளாவிய சிறுதானியங்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்த போது, அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.
சிறு தானிய பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து இந்திய அமெரிக்க பாடகி பாலு (பால்குனி ஷா), அவரது கணவர் கவுரவ் ஷா ஆகியோர் இந்த பாடலை எழுதி உள்ளனர். இது பற்றி பாடகி பாலு கூறுகையில்,
எங்களுடன் இணைந்து பிரதமர் மோடி இந்த பாடலை எழுதினார். கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது, தினை பற்றி பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மாற்றத்தைக் கொண்டு வந்து மனிதகுலத்தை உயர்த்தும் சக்தி இசைக்கு உண்டு.
இது குறித்து கலந்துரையாடிய போது, பசி பட்டினியை போக்கும் விழிப்புணர்வு செய்தியுடன் ஒரு பாடலை எழுத வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். அதன்படி இந்த பாடல் உருவானது என்று அவர் கூறினார்.