தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..! கையெழுத்தை தமிழில் போடுங்கள்...!

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தற்போது மும்மொழி விவகாரம் குறித்து பேசியிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாக சாடினார். விழாவில் பேசிய பிரதமர்,"தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடம் இருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன். அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை. தமிழைப் பற்றி பெருமைப்படும்பட்சத்தில், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் தங்கள் பெயரைக் கையெழுத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
கடந்த சில வாரங்களாக, மத்திய அரசுக்கும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கும் கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது எனலாம். புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கை திணிப்பதாக தமிழக அரசு, மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டி வந்தது. அதுமட்டுமின்றி, கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தொகையையும் மத்திய அரசு வழங்காதததும் பெரியளவில் விவாதத்தை கிளப்பியது. தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு மத்திய அரசு அச்சுறுத்தல் விளைவிப்பதாக திமுக அரசு குற்றஞ்சாட்டி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி,"ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் மருத்துவர்களாக வேண்டும் என்ற கனவை நனவாக்கும் வகையில், தமிழ் மொழியில் மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை நான் வலியுறுத்துகிறேன். நமது நாட்டின் இளைஞர்கள் மருத்துவர்களாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன" என்றார்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு அரசாங்கத்திற்கு முக்கியமானதாகும். கடந்த பத்தாண்டுகளில், தமிழ்நாட்டின் ரயில்வே பட்ஜெட் ஏழு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தபோதிலும், சிலர் நியாயமின்றி தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் ரூ.900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு, தமிழ்நாட்டின் ரயில்வே பட்ஜெட் ரூ.6000 கோடியைத் தாண்டியுள்ளது. கூடுதலாக, ராமேஸ்வரத்தில் உள்ள ரயில் நிலையத்தையும் சேர்த்து 77 ரயில் நிலையங்களை மத்திய அரசு நவீனமயமாக்கி வருகிறது" என்றார். அதாவது மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை என்ற திமுக அரசின் குற்றச்சாட்டை பிரதமர் மோடி முற்றிலும் மறுத்துள்ளார்.