நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - 3 நாள் பயணத் திட்டம் வெளியீடு..!
2024 மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் எஞ்சிய ஒருகட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது.
இதில் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் மே 30 மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அன்றைய தினமே புறப்பட்டு கன்னியாகுமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அடுத்த மூன்று நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளார். மே 31ஆம் தேதி விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். அங்குள்ள நினைவு மண்டலத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடவுள்ளார். அதுவும் ஒரு நாள் முழுக்க பிரதமர் மோடி தியானம் செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 மக்களவை தேர்தலின் போது இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்ததும், நேராக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். பாரம்பரிய உடையில் கேதர்நாத் பனிக்குகைக்கு சென்று தியானம் செய்தார். 2024 மக்களவை தேர்தலின் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு பின்னர் தியானத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த முறை வடக்கில் ஒரு பகுதியை தேர்வு செய்த பிரதமர் மோடி, இம்முறை தெற்கில் ஒரு பகுதியை தேர்வு செய்திருக்கிறார்.
3 நாள் பயணத் திட்டம் இதுதான்
தேர்தல் பரப்புரை நாளை (மே 30) முடியும் நிலையில், அன்றைய தினம் பரப்புரையை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேரடியாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் இல்லத்தில் உள்ள ஹேலி பேட்டில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு கார் மூலமாக செல்லும் பிரதமர், கடலில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகு மூலம் செல்கிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி, அன்று இரவு அங்கு தங்குகிறார். மறுநாள் 31ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூன் 1ஆம் தேதி வரை தியானம் செய்யும் அவர், அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மூன்று நாட்கள் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தங்க இருப்பதால் கன்னியாகுமரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.