நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.
7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வரும் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு அன்று மாலை வருகிறார்.
விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி அன்று மாலையில் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபத்தில் தியானம் செய்கிறார்.அதன் பிறகு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பிற்பகலில் அவர் மீண்டும் டெல்லி புறப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இமயமலை பயணம் சென்று அங்குள்ள குகை ஒன்றில் தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது