1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!

1

சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகி விட்டது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது.

பிரதமா் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், மேற்கு வங்கத்தில் ஜூன் 17-ம் தேதி நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த 2 ரயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்த புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது குறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவா் கூறுகையில், 

சென்னை பெரம்பூா் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரயில்கள் இயக்கத்திலும், 9 ரயில்கள் அவசர தேவைக்காகவும் உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன. இவ்வாறு அவா் கூறினார்.

இந்த நிலையில் சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவைகள் அடுத்த (செப்டம்பா்) மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 

சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். 

தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like