அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி..!

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.
இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.