இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரிடம் மீனவர் பிரச்சினையை பேசி தீர்வு காண வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2022-ம் ஆண்டு பதவியேற்றதற்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பூகோள ரீதியான நெருக்கம் மற்றும் வரலாற்று, பொருளாதார மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் காரணமாக நீண்ட காலமாக பல பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாக அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது, தமிழக மக்களுக்கு மிகவும் கவலையளிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான கச்சத்தீவை மீட்பது மற்றும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், இலங்கையில் உள்ள தமிழ்ப் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் பிரதமர் மோடி பேசி, தீர்வு காணுமாறும் முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார்.