செஸ் வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..!
கனடாவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் அபார வெற்றி பெற்று, சாதனைப் படைத்துள்ளார் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டியுள்ளார்.
இந்நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் சாதனை படைத்த குகேசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் “குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. குகேஷின் செயல்பாடு கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் குகேஷுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வியத்தகு சாதனையைப் புரிந்துள்ள குகேஷுக்கு எனது பாராட்டுகள்!. வெறும் 17 வயதில், கேண்டிடேட்ஸ் தொடரின் மிக இளவயது 'சேலஞ்சர்'-ஆக வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி வெறும் முதல் வீரராகச் சாதித்துள்ளார். அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றிவாகை சூடிட எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.