1. Home
  2. தமிழ்நாடு

மணி சங்கர் அய்யரின் கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி !

1

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யரின் ‘பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளது’  என்ற கருத்துக்கு பிரதமர் மோடி பதிலடி தந்துள்ளார். இதில் பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார சூழலை பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

அது பல மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ என மணி சங்கர் அய்யர் விளக்கம் கொடுத்தார். தற்போது அது வைரலான நிலையில் அது சார்ந்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சி இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளதை பாருங்கள் என அவர்கள் சொல்கிறார்கள். அதாவது நம் நாட்டின் மீதான தாக்குதல் குறித்து பேசுகிறார்கள்.

குண்டுகளை தன்வசம் வைத்துள்ள பாகிஸ்தான் நாட்டின் நிலையைப் பாருங்கள். தங்கள் குண்டுகளை விற்பனை செய்ய முயல்கிறார்கள். வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. ஏனெனில், அவர்களது தரம் குறித்து அனைவரும் அறிந்ததே” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக மணி சங்கர் அய்யர், “அந்த வீடியோவில் நான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரில் இருந்தே அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அது எடுத்தது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் தொய்வடைந்த காரணத்தால் அது இப்போது மீண்டும் பகிரப்பட்டுள்ளது. அவர்களது விளையாட்டுக்கு நான் பொறுப்பில்லை” என விளக்கம் கொடுத்திருந்தார்.

அந்த வீடியோவில் அவர் பேசியது: “பாகிஸ்தானும் இறையாண்மை மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுதான். அரசு, இஸ்லாமாபாத் உடன் கடுமையாக பேசலாம். ஆனால், அவர்கள் அண்டை நாடு என கருதி மரியாதை கொடுக்க வேண்டும். இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை முதலில் தொடங்குங்கள்.

துப்பாக்கி ஏந்தி செல்வதால் எந்த பலனும் இல்லை. பதற்றம் தான் அதிகரிக்கிறது. அங்கு ஒரு பைத்தியக்காரர், இந்தியா மீது குண்டு வீச முடிவு செய்தால் என்ன ஆகும்? அவர்கள் வசம் அணுகுண்டு உள்ளது.

நம்மிடமும் அணுகுண்டு உள்ளது. லாகூரில் அந்த குண்டை வெடிக்கச் செய்தால் எட்டு நொடிகளில் அதன் கதிரியக்கத்தின் தாக்கம் அமிர்தசரஸ் நகரை அடைந்துவிடும்.

பாகிஸ்தானுடனான உறவு தீவிரமானதாக இருந்தாலும் அதை தீர்க்க நாம் முயற்சிக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பேச்சுவார்த்தை என்பதே நடக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் மறுப்பு: அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் உடனடியாக விளக்கம் தரப்பட்டது. இதனை காங்கிரஸின் பவன் கெரா தெரிவித்தார். அரசியல் ஆதாயத்தை பெறுவதற்காக மணி சங்கர் அய்யரின் பழைய பேட்டியை பாஜக வேண்டுமென்றே பரப்பி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டி வருகிறது.

மணி சங்கர் அய்யரின் கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் பிரதமர் மோடியும் பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like