மணிப்பூர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது அவரது பதவிக்கு அழகல்ல : ராகுல் காந்தி..!

ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிகிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பிரதமர் மோடி எதுவும் செய்யாமல் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்து சிரித்தார். அது அவரது பதவிக்கு அழகல்ல.
கடந்த 19 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நான் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வருகிறேன். ஆனால் மணிப்பூரில் நான் கண்டதை வேறு எங்கும் பார்க்கவில்லை.
நான் மெய்தி பகுதிக்கு சென்றபோது, ”உங்களது பாதுகாப்பிற்காக மெய்தி பகுதியில் எந்த குக்கி வீரரையும் அழைத்து வராதீர்கள்” என்று கூறப்பட்டது. மீறி வந்தால் கொல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டது. குக்கி பகுதியிலும் இதே நிலைதான் இருந்தது.
அதனால் தான் கலவரத்திற்கு பிறகு மணிப்பூர் குக்கி, மெய்தி என பிரிக்கப்பட்டுள்ளது என்றும், பாஜக பாரதமாதாவை கொன்றுவிட்டது என்றும் நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்” என்றார் ராகுல் காந்தி.
தொடர்ந்து அவர், “நமது ராணுவத்தால் மணிப்பூர் கலவரத்தை இரண்டு நாட்களில் தடுத்து நிறுத்த முடியும். பிரதமரின் கையிலும் இதனை கட்டுப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் அவர் அதைச் செய்ய மறுக்கிறார்.
அவர் மணிப்பூருக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கு இரு சமூகத்தினரிடமும் பேசி அவர் நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். ஆனால் மணிப்பூரை எரிக்கவே விரும்பும் பிரதமர், அணைக்க விரும்பவில்லை என்பதே உண்மை.
ஒருவர் பிரதமரானால், குட்டி அரசியல்வாதி போல் பேசக்கூடாது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தில் காங்கிரசை, எதிர்கட்சிகளை விமர்சித்து பிரதமர் மோடி நேற்று 2 மணி நேரமாக பேசியது அவரது பதவிக்கு நியாயம் இல்லை.
அவர்கள் (அரசு) எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தாலும் எங்கள் பணி மாறாது. மணிப்பூரில் வன்முறையை தடுப்பதே எங்கள் பணி.
இறுதியாக மணிப்பூர் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். நாடு உங்களுடன் நிற்கிறது. இந்த பாராளுமன்றம் உங்களுடன் உள்ளது. மணிப்பூர் இந்த மோதலில் இருந்து மீண்டு விரைவில் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையில் அணிவகுத்துச் செல்லும். அது அமைதியைக் காணும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.