அடுத்த தேர்தலில் பிரதமர் மோடி தோற்பது உறுதி: லல்லு பிரசாத்..!
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாபா பைத்யநாத் தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:-
நாட்டில் இப்போது நிலைமை சரியில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. மக்கள் பசியால் வாடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நரேந்திர மோடி மீண்டும் மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால் இந்த முறை அவர் வெளியேறுவது உறுதியாகிவிட்டது. சமையல் எரிவாயு விலையை குறைத்திருப்பது தேர்தலுக்கு முன்னால் மக்களை ஏமாற்றும் செயல்.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மோசமாக தோல்வியடைந்தது. அதேபோல் பிற சட்டமன்ற தேர்தல்களிலும் படுதோல்வி அடையும். அரசியலமைப்பு சட்டத்தையோ, ஏழைகளையோ பாதிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் (பாஜக), அம்பேத்கரின் பெயரை அழிக்க விரும்புகிறார்கள். ஜி20 மாநாட்டை நடத்தியதால் சாமானிய குடிமக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன? இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு பெரும் தொகை செலவிடப்பட்டிருக்கிறது.
டெல்லியில் வரும் 13-ம் தேதி இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின், 28 எதிர்க்கட்சிகளும் களப்பணிகளை தொடங்கும். இந்தியா கூட்டணியின் தலைவர் உரிய நேரத்தில் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.