இன்று புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! முழு பயண விவரம் இதோ!

ராமேஸ்வரத்திற்கு இன்று 12 மணிக்கு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தைப் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 10:40 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி, மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்திற்கு 11.45 மணிக்கு வந்து இறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹெலிபேட் தளத்திலிருந்து சாலை மார்க்கமாக பாம்பன் சாலை பாலத்தின் நடுவே உள்ள மேடைக்கு சென்றடையும் பிரதமர் நண்பகல் 12 மணி அளவில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ராமநவமி என்பதால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு 12.40 மணி அளவில் செல்லும் அவர், பிற்பகல் 01.15 மணி வரை சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடக்கும் நிகழ்ச்சிக்கு 1.30 மணிக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 2.30 மணி வரை பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு சாலை மார்க்கமாக மீண்டும் மண்டபம் ஹெலிபேட் தளத்திற்கு சென்று அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் 3.00 மணிக்கு மதுரை புறப்படுகிறார். பின்னர், 03.50 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்வார் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். மேலும் வாலாஜாபேட் - ராணிப்பேட்டை இடையிலான 4 வழிச்சாலை உள்ளிட்ட நிறைவு பெற்ற நெடுஞ்சாலை பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.