1. Home
  2. தமிழ்நாடு

கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்' விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு..!

Q

கானா, டிரினிடாட் டுபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அக்காராவில் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்றார்.
அங்கு மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 3 தசாப்தத்தில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரதமர் மோடியை பார்க்க, அங்கு வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடினர். அவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
அதிபர் மஹாமாவுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. எங்கள் உறவுகள் இருநாட்டு மக்களுக்கு பயனளிக்கும். வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். நிதி தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதற்கிடையே, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்' என்ற தேசிய விருதைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக நான் பெற்றுக் கொண்டது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விருது பெற்ற பிறகு சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
'தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா' விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த கவுரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கவுரவம் ஒரு பொறுப்பாகும்; வலுவான இந்தியா-கானா நட்புறவை நோக்கி தொடர்ந்து பாடுபடுவது. இந்தியா எப்போதும் கானா மக்களுடன் நிற்கும். மேலும் நம்பகமான நண்பராகவும் மேம்பாட்டு கூட்டாளியாகவும் தொடர்ந்து பங்களிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like