கே நட்வர் சிங் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்..!
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே நட்வர் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நட்வர் சிங், டெல்லி அருகே குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் கடந்த 1931ஆம் ஆண்டு பிறந்த நட்வர் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 – 2005 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகவும் இவர் 1966-71 அம் ஆண்டு வரை பதவி வகித்தார். வெளியுறவுத்துறையில் 31 ஆண்டு காலம் நட்வர் சிங் பணியாற்றினார். 1984 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நட்வர் சிங் அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்ட நட்வர் சிங் 1985 ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள நட்வர் சிங்கிற்கு கடந்த 1984 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது விழங்கப்பட்டது.
நட்வர் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
வெளியுறவுக் கொள்கையில் நட்வர் சிங் மிகப்பெரிய பங்களிப்பினை செய்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. நட்வர் சிங் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.