ஒரே ஒரு விஷயத்துக்காக பிரதமர் மோடியை பாராட்டலாம்: உதயநிதி ஸ்டாலின்..!
சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். உதயநிதி பேசும்போது, “2020ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். இப்போது 2047இல் வல்லரசாக மாற்றுவேன் என்கிறார். ஆனால், ஒரே ஒரு விஷயத்துக்காக பிரதமர் மோடியை பாராட்டலாம்.
இந்தியாவை மாற்றிக்காட்டுவேன் என்று கூறினார். அவர் சொன்னது போலவே இந்தியா பெயரை மாற்றிவிட்டு இனி பாரத் என அழையுங்கள் என்கிறார். தற்போது 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் ஊழல்களை சிஏஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது” என்று பாஜகவை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் தன்னை இந்தியே படிக்கவிடவில்லை என சில மாதங்களுக்கு முன்பு கூறினார். அவரை யாரும் இந்தி படிக்க வேண்டாம் என தமிழ்நாட்டில் சொல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழக பாஜக அலுவலகம் அருகில் தான் இந்தி பிரச்சார சபாவே அமைந்துள்ளது. யார் வேண்டுமானாலும் அங்கு சென்று இந்தி கற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்தி படித்தே ஆக வேண்டும் என்று சொல்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
அதுபோலவே தான் வகிக்கும் பொறுப்பின் மாண்பைக் கூட உணராமல் கடந்த சில நாட்களாக திட்டமிட்டு தமிழக அரசின் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளை நிர்மலா சீதாராமன் கூறி வருகிறார். அதற்கெல்லாம் நம் தலைவர் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் உண்டானது. வெள்ள மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டார் முதல்வர். அதற்கு நிர்மலா சீதாராமனோ நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா என்று கேட்டார். அதற்குதான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம் என்று பதிலடி கொடுத்தேன். கடந்த 9 வருடங்களில் 5 லட்சம் கோடி ரூபாயை கொடுத்துள்ளோம். ஆனால், ஒன்றிய அரசு நமக்கு திருப்பி கொடுத்ததோ வெறும் 2 லட்சம் கோடி ரூபாய்தான்.
நாம் வரியாக ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் கொடுத்தால் நமக்கு திரும்பி வருவது என்னவோ 23 பைசாதான். இப்படியாக கடந்த 5 வருடங்களில் மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் ஒன்றிய அரசு பறித்துள்ளது. பட்ஜெட்டிற்கு முன்பாக எப்போதும் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டுகிறார். கண்டிப்பாக இந்த வருடமும் தமிழகத்துக்கு அல்வாதான் கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் அல்வா கொடுக்கும் முன்னர் நாம் முந்திக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் பாஜகவுக்கு அல்வா கொடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசினார்.