எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
வளர்ந்த நாடு எனும் இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதற்கான அமிர்த கால தொடக்கத்தில் நாடு உள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் இந்த திட்டம் ஒரு புதிய அத்தியாயமாக தொடங்குகிறது. இதற்கான தீர்மானங்கள் புதிய ஆற்றல், புதிய உத்வேகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள 1,300 முக்கிய ரயில் நிலையங்கள் அமிர்த பாரத ரயில் நிலையங்களாக மறுசீரமைக்கப்பட உள்ளன. இவற்றில் முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களுக்கான மறுசீரமைப்புப் பணிகள் இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளன. சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும். இதன்மூலம் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும். ரயில் நிலையங்கள் எளிய மக்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும்.
தற்போது ஒட்டுமொத்த உலகின் கவனமும் இந்தியா மீது குவிந்துள்ளது. இந்தியாவின் கவுரவம் உலக அளவில் அதிகரித்துள்ளது. இந்தியா விஷயத்தில் உலகின் அணுகுமுறை மாறி இருக்கிறது. இதன் பின்னணியில் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழு மெஜாரிட்டி உள்ள அரசை மக்கள் கொண்டு வந்தது. இரண்டாவது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முழு மெஜாரிட்டி உள்ள அரசு நாட்டின் சவால்களுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் பெரிய முடிவுகளை தொடர்ந்து எடுத்தது.
துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் இன்றும் பழைய முறையையே பின்பற்றுகின்றனர். அவர்கள் தாங்களாக எதையும் செய்ய மாட்டார்கள். வேறு யாரையும் செய்ய விட மாட்டார்கள். நாடு நவீன பாராளுமன்ற கட்டிடத்தை கட்டியது. நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம் பாராளுமன்றம். அதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால் இந்த எதிர்க்கட்சியினர் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை எதிர்த்தனர். கடமைப் பாதையை மீண்டும் உருவாக்கினோம்.
நாட்டிற்காக துணிச்சலுடன் உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களுக்கு போர் நினைவுச் சின்னம் கூட இதற்கு முன் கட்டவில்லை. நாம் தேசிய போர் நினைவிடத்தை கட்டியபோது அதை பகிரங்கமாக அவர்கள் விமர்சித்தார்கள். அதற்காக அவர்கள் வெட்கப்படவேயில்லை. சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை உலகிலேயே மிக உயரமான சிலை. ஒவ்வொரு இந்தியனும் அதை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்கள் யாரும் அந்த சிலையை பார்வையிட்டதில்லை. ஆனால் எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து, நாங்கள் நேர்மறையான அரசியலின் பாதையில் செல்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.