1. Home
  2. தமிழ்நாடு

இதை புரிஞ்சிக்கோங்க..! மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கே அதிக பயன்: டி.கே.சிவக்குமார் உறுதி..!

1

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு இயங்கி வரும் பயோ-சி.என்.ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார். இதன் மூலம் குப்பைகள் எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்று அவர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட 50 அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் வந்துள்ளேன். திடக்கழிவுகள் உருவாகும் வழிகள் குறித்தும், அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிப்பு குறித்தும் அறிந்து கொண்டோம். இந்த ஆய்வுப் பணிகளுக்காக கடந்த ஓராண்டுக்கு முன்பே வர திட்டமிட்டிருந்தேன். இப்போதுதான் வர முடிந்தது. என்னுடன் வந்துள்ள அரசு அதிகாரிகள் இந்த பணிகளையும் மற்றும் சென்னை மாநகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளையும் பார்வையிட்டனர். தமிழக அரசின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டுக்கள்.

இதர மாநிலங்களுக்கும் இந்த திட்டம் முன்னோடியாகும். தமிழக அரசிடமிருந்து நாங்களும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டோம். இவற்றை நாங்களும் பின்பற்றி எங்கள் மாநிலத்தில் திடக்கழிவு மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்துவோம். திடக்கழிவு என்பது தேசிய அளவில் முக்கியமான பிரச்சினை. எனவே, திடக்கழிவுகளை முறையாகக் கையாண்டால் அதிலிருந்து மின்சாரம், இயற்கை எரிவாயு போன்ற பயனுள்ள பொருட்களை தயாரிக்கலாம். திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு சென்னை மாநகரம் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையில் சென்னை மாநகரை நாங்களும் பின்பற்றுவோம்,” என்றார்.

தொடர்ந்து, மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிட்டு வருகிறது. அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறதே என செய்தியாளர்கள் கேட்டபோது, “மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக நான் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. இரண்டு மாநிலங்களிலும் மழை நன்றாகப் பொழிந்து உதவியிருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் அது கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் அளிக்கும்,” என்றார்.

இதையடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்த சிவக்குமார், அங்கிருந்து சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாத நிலையில், மரியாதை நிமித்தமாக அவர் உதயநிதியை சந்தித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

''மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் கர்நாடகா மாநிலத்தைவிட தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் அதிக பயன் கிடைக்கும். போதியளவில் மழை பெய்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால், கர்நாடக நீர் திறப்பு குறித்து பேச வேண்டியதில்லை. 2 மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்'' என்று கூறினார்

 

Trending News

Latest News

You May Like