தயவு செய்து யாரும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்... பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று புயலாக மாறும் என சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் சிவகங்கை, பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும்.
இந்நிலையில், இன்று முதல் நவம்பர் 30ம் தேதி வரை நாகபட்டினம் முதல் திருவள்ளூர் வரை கடற்கரை பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதன் காரணமாக கடல் அலைகள் 9 முதல் 12 அடி வரை எழும்ப வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் கடற்கரை அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.