தயவு செய்து இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நீங்கள் சொல்வதே, இன்னொரு மொழிப்போரை தூண்டுவதுபோல் தான் அமைந்திருக்கிறது. இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என பகிரங்கமாகக் கூறிக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
உ.பி மாநிலம் வாரணாசியில் தொடங்கிய காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அப்போது அவரிடம், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்குரிய கல்வி நிதி விடுவிக்கப்படும்” என தெரிவித்து சென்றார்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி, ”உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல” என பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தயவு செய்து கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இதில் சுமார் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. மும்மொழிக் கொள்கை என்பது நமக்கு தேவையில்லாதது. எங்களை மிரட்டி அடிபணிய வைக்கப் பார்க்கிறீர்கள்.
இது கட்சிக்கான நிதி அல்ல. மாணவர்களுக்கான நிதி. அரசியல் பார்க்காமல் உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என பகிரங்கமாகக் கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், “புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி ரூ 2152 கோடியை விடுவிக்க முடியாது என்றும், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்.
சுதந்திர இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடும் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் வெளியிட்ட பதிவில், “தேசியக் கல்விக் கொள்யை தமிழ்நாடு நிராகரிப்பதை அராஜகம் என முத்திரை குத்துவது, தேவையில்லாத மும்மொழிக்கொள்கையை திணிப்பது, மறுத்தால் நிதியை தராமல் இருப்பது இதுதான் பாஜகவின் உத்தி. கூட்டாட்சி என்பது இவர்கள் மொழியில், ‘மாநிலங்கள் உத்தரவுகளை பின்பற்ற வேண்டுமே தவிர கேள்வி எழுப்பக்கூடாது’ என்பதே ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.