தயவு செய்து இனி விஜய் குறித்து கேள்வி கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஆக.29) திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குத் திருட்டு நடக்கிறது. தேர்தல் ஆணையம் ஜனநாயக நாட்டில் முறையான தேர்தலை நடத்த வேண்டும். பிகார் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் தேர்தல் முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்
தேர்தல் ஆணையம் எப்போதுமே பொம்மையாக தான் செயல்படுகிறது. முதலில் ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். கள்ள ஓட்டு, ஓட்டு திருட்டு போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் தான் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த கேள்விக்கு, “மக்கள் மத்தியில் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கூட்டணி பற்றி நீங்களாக கற்பனை செய்துகொண்டால் நான் பதில் சொல்ல முடியாது. நாங்கள் எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. உரிய நேரத்தில் அதுகுறித்து அறிவிப்போம்” என்று பதிலளித்தார்.
பின்னர், தவெக மாநாடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “செய்தியாளர்களுக்கு இதைத்தவிர வேறு கேள்வியே இல்லையா? நான் தமிழ்நாடு முழுவதும் தினமும் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். ஒன்று கூட்டணி பற்றி கேட்கிறீர்கள், இல்லையென்றால் நடிகர் விஜய் பற்றி கேட்கிறீர்கள். இந்த இரண்டு கேள்விகளைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா?
நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்து ஏன் கேட்க மறுக்கிறீர்கள்? இங்கு உப்பளத் தொழிலாளர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளனர்? சிறு, குறு தொழில்கள் நசிந்துள்ளன. கப்பல் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் என எத்தனையோ இருக்கின்றன. செய்தியாளர்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண். நீங்கள் ஏன் மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர மறுக்கிறீர்கள்?
இதன் பிறகு கூட்டணி மற்றும் விஜய் இந்த இரண்டு குறித்தும் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத் தான். மக்கள் நலமாக இருந்தால்தான் இந்த நாடே நன்றாக இருக்கும்” என்றார்.