பின்னணி பாடகி சுசீலா நாளை டிஸ்சார்ஜ்..!
சிறுநீரக கோளாறால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும்,தொடர்ந்து தீவிர கண்காணித்து வருகிறோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனைப் போன்ற குரலைக்கொண்ட பி.சுசீலா, முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் பாடல்கள் பாடியுள்ளார். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம் பெற்ற “பால் போலவே” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார் பி.சுசீலா. சிறந்த பின்னணி பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமையை பெற்றவர் இவர்.பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது, 5 முறை தேசிய விருது, 3 முறை தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அலங்கரித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.