இந்தியாவில் பெட்ரோல் ரூ.103.. அதுவே இந்தியாவில் இருந்து பெட்ரோலை வாங்கும் பூட்டானில் விலை 63 தானாம்..!

சென்னையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 100.80 மற்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.92.39 ஆக உள்ளது. அப்படியிருக்க, தற்போது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் 64 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறதாம். இது இந்தியாவில் இல்லை பூடானில்...
சமீபத்தில் இந்தியர் ஒருவர் பூட்டானுக்கு சென்றிருக்கிறார். அங்குதான் பெட்ரோல் விலையை பார்த்து அவர் ஷாக் ஆகி உள்ளார். அந்த அனுபவத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதலங்களில் பதிவிட்டுள்ளார்.
முகமது அர்பாஸ் கான் என்பவர் சமீபத்தில் பூட்டான் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார். அங்கு பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இருந்துள்ளன. பூட்டானில் பாரத் பெட்ரோலியம் பங்கை பார்த்ததே அவருக்கு முதல் ஆச்சர்யம். ஆனால், அதைவிட அவரை மலைக்க வைத்தது பெட்ரோல் விலைதான்.
இந்த பெட்ரோல் பங்க் இந்தியா - பூட்டான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளதாம். இதுகுறித்து அர்பாஸ் வெளியிட்ட வீடியோவில்,"பூட்டானில் ஒரு அற்புதமான சம்பவம் நடந்தது. நான் இப்போது பூட்டானில் இருந்து பேசுகிறேன். பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளன. இவை இந்திய பெட்ரோல் பங்குகள்தான். ஆனால் இங்கு பெட்ரோல் விலையை சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என பேசியிருந்தார்.
அதாவது, ஒரு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டரின் விலை ரூ.63.92 ஆகும். அதாவது, அந்த வீடியோவில் பெட்ரோல் பங்கில் 63.92 என பூட்டான் நாணயத்தில் குறிப்பிட்டிருந்தாலும், பூட்டானிய நகுல்ட்ரம் மற்று் இந்திய ரூபாய் இரண்டும் மதிப்பு தானாம். அப்படியிருக்க இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100க்கும், பூட்டான் எல்லையில் ரூ.64க்கும் விற்கப்படுவதுதான் அர்பாஸ் உள்பட பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அர்பாஸின் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 73 லட்சம் வியூஸ் வந்துள்ளது. பலரும் இந்த வீடியோவில் தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு இன்ஸ்டா பயனர் அவரது கமெண்டில், இந்தியாவில் இருந்து பெட்ரோலை வாங்கி எப்படி இந்த குறைந்த தொகைக்கு விற்பனை செய்கின்றனர் என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அதற்கு மற்றொரு பதிவரின் கமெண்ட் பதிலளாக அமைந்தது. அதாவது,"இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் அதன் மீது விதித்துள்ள வரிகளே காரணம். வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என பதிவிட்டிருந்தார்.