அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், படிக்கும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடந்த மாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகின்றன. முதலில் ஞானசேகரன், திமுக உறுப்பினர் என கூறப்பட்டது. பின்னர் அவர் திமுகவில் இல்லை என மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஞானசேகரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், யார் இந்த சார் என்ற வசனத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனா்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஞானசேகரன் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரன் வழக்கில் அண்ணாமலையிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியதாகவும், எனவே அந்த வழக்கு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக இருந்த ஞானசேகரன் மீது 11 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, கடந்த மே 28ஆம் தேதி, சென்னை மகளிர் நீதிமன்றம் அவருக்கு குறைந்தது 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு விசாரணை மிக வேகமாக நடைபெற்றதுடன், 5 மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்பது சமூக நீதி செயல்பாட்டில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. நீதிபதி ராஜலட்சுமி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளிக்கு மன்னிப்பு கிடைக்காது என்றும், குற்றவாளியின் செயல்கள் மாணவியிடம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதற்காக போலீசார், விசாரணை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் செய்த செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். அதேசமயம், அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, வழக்கின் தொடக்கத்தில் அதை மறைக்க முயற்சி செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். பாஜக, குற்றவாளியின் பின்னணியை அரசியல் தொடர்புடன் இணைத்து விமர்சனம் செய்தது.
முன்னதாக ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியை மையமாக கொண்டு அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வலியுறுத்தியதாகவும், ஆனால் இதுவரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே தான் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் வழக்கறிஞர் ரவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் நாட்களில் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் பட்சத்தில் அண்ணாமலை நேரில் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.