தெரு நாய்களை கொன்றவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50000 வெகுமதி - பீட்டா அறிவிப்பு..!
சில நாட்கள் முன்பாக கிழக்கு டில்லியில் உள்ள கபீர் நகரில் 2 தெருநாய்களை மர்ம நபர்கள் குத்திக் கொன்றனர். அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தெருநாய்களை கொன்றவர்கள் பற்றிய துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி தரப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து பீட்டா அமைப்பு கூறி உள்ளதாவது;
விலங்குகளை கொல்வது, கொடுமைப்படுத்துவது என்பது உளவியல் பிரச்னையால் ஏற்படுவதாகும். இவர்கள் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். ஆகையால், அனைவரின் பாதுகாப்புக்காக இந்த வழக்கு பற்றி ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசில் தெரிவிக்கலாம்.
தெரிந்த விவரங்களை போலீசாரிடம் கூற அவர்கள் முன்வர வேண்டும். தெரு நாய்களை கொன்றவர்கள் யார் என்ற விவரங்கள் அல்லது அடையாளங்கள் ஏதேனும் தெரிய வந்தால் அவர்களுக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும். தெரிந்த உண்மைகளை அவர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு பீட்டா அமைப்பு கூறி உள்ளது.