ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி..!
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.
இந்நிலையில், மழைப் பொழிவு குறைந்ததைத் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது. எனவே, ஒகேனக்கல்லிலும் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிவடைந்தது.
அதைத் தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிப்பது மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது தொடர்பாக பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினர், காவிரி ஆற்றில் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு தொடர்பான தகவல்களை இக்குழுவினர் மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் அளித்தனர். இந்நிலையில், 23 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம் அருவிகளுக்குச் செல்லும் வழியில் உள்ள பாதுகாப்பு தடுப்புகள் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்து இருப்பதால் அவை சீரமைக்கப்படும் வரை அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து நேற்று காலை பென்னாகரம் எம்.எல்.ஏ.வான ஜி.கே.மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோர் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தைத் தொடங்கி வைத்தனர்.
பரிசல் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று காலை முதல் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.