எனக்கு மக்கள் பணி தான் முக்கியம்... அப்புறம் தான் சினிமா- பவன் கல்யாண் திட்டவட்டம்..!

ஆந்திரா துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், அவரது சொந்த தொகுதியான பிதாபுரம் (Pithapuram) பகுதியில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் மேடைக்கு வரும்போது, ரசிகர்கள் பலரும் அவர் நடிக்கும் ‘ஒஜி’ படத்தை குறிப்பிட்டு முழக்கங்களை எழுப்பினர். அப்போது சிரித்துக்கொண்டே பவன் கல்யாண், “படங்களில் நடிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” என ரசிகர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், “இந்த தொகுதியை சிறப்பாக மாற்றுவேன் என நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன். முதலில் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். குறைந்தப் பட்சம் புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பதற்கோ, குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதற்கோ யாரும் என்னை குறை சொல்லாமல் இருக்க வேண்டும். அதற்கான நான் அதில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது என்னிடம் மக்கள் பிரச்சினையை கவனிக்காமல் ‘ஒஜி’படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறீர்களே? என கேள்வி எழுப்பினால் நான் என்ன செய்வேன்?” என்றார்.
மேலும், “நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். முதலில் நான் மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறேன். பின் நேரம் கிடைக்கும்போது படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன் என பட தயாரிப்பாளர்களிடம் நான் பணிவுடன் கூறிவிட்டேன். நீங்கள் நிச்சயம் ‘ஒஜி’ படத்தைப் பார்ப்பீர்கள்.அது உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.
பவன் கல்யாண் நடிக்கும் ‘ஒஜி’ திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பவன் அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் படம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.