மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..! பெங்களூரில் வரலாறு காணாத மழை..!

ஜூன் முதல் நாளில் இருந்தே கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று (ஜூன் 2-ம் தேதி) பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது என்றால் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. அதிலும் குறிப்பாக அதிகபட்சமாக பெங்களூரு சிட்டி பகுதியில் 11 செ.மீ மழையும், ஹெச்.ஏ.எல் பகுதியில் 4.7 செ.மீ மழையும் பெய்துள்ளது.
நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே 6.9 செ.மீ அளவிற்கு மிக கனமழையும் பெங்களூரு அர்பன் பகுதியில் 10.3 செ.மீ மழை பெய்துள்ளது. பெங்களூரு வெதர்மேன் எக்ஸ் வலைதளப் பதிவின் படி, ஜூன் மாதத்தில் கடைசியாக 1891-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி 10.16 செ.மீ மழையும் அதன்பிறகு 2009-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி 8.96 செ.மீ மழையும், 2013-ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி 10 செ.மீ மழையும் பெய்துள்ளது.
இதை வைத்து பார்த்தால் 133 ஆண்டுகளுக்கு பின்னர் பெங்களூரு நகரில் ஜூன் மாதம் மழைப்பொழிவு புதிய வரலாற்று இலக்கை எட்டியுள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் சராசரியாக 11 செ.மீ மழை தான் பொழியும். அந்த அளவை இந்தாண்டு பெய்த ஜூன் மாத மழைப் பொழிவு இதை ஒரேநாளில் முறியடித்து விட்டது. கடந்த இரண்டு நாளில் மட்டும் 14 செ.மீ.,க்கு மேல் மழையின் அளவு சென்றுவிட்டது.
இதனால் பல இடங்களில் 32 மரங்கள் வேரோடு விழுந்தன மற்றும் மொத்தமாக 206 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மெட்ரோ வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ட்ரினிட்டி சர்க்கிள் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையில் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் கட்டுப்பாட்டு அறைகளுக்கு புகார்கள் குவிந்தன.
அடுத்து வரும் நாட்களிலும் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் பரவலானது முதல் கனமழை வரையும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்படுள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் கர்நாடகாவின் மத்திய பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.