"கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்" உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு !

"தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொடிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கிராம சபைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மவுரியா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ரிட் மனுவை பொதுநல மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
இதனால், மக்கள் நீதி மய்யம் சார்பில் விரைவில் பொது நல மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.